இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வசௌந்தரேஸ்வரர் / அழகியநாதர் சுவாமி
இறைவி :ஸ்ரீ பெரியநாயகி அம்பாள்
தல மரம் :பனைமரம்
தீர்த்தம் : பராசர தேர்தம்,அமிர்த தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் / அழகியநாதர் திருக்கோயில் திருப்பனையூர், திருவாரூர்
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து " என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர் ' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊருக்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.
தல வரலாறு:
திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர். தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய் மாமனாகிய 'இரும்பிடர்த்தலையார் ' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல் குழந்தையையும் தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இத்தல விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் 'துணை இருந்த விநாயகர் ' என்னும் பெயர் பெற்றார்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் / அழகியநாதர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் மாவட்டம், .
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்:
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர். நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது..