Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Saatchi Naathar Shiva Temple - AvalivaNallur Village -Thiruvaarur

அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ சாட்சிநாதர் ! திருக்கோயில் -அவளிவ நல்லூர்,திருவாரூர்


Saatchi Naathar Shiva Temple - AvalivaNallur Village -Thiruvaarur !!இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதர் சுவாமி

இறைவி :ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாள்

தல மரம் :வில்வம் மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThiruvarurDistrict_SaatchinatharTemple-Avaliyanallur_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ சாட்சிநாதர் ! திருக்கோயில் -அவளிவ நல்லூர்,திருவாரூர்

சிவனாரை அன்றி வேறு எதையுமே நினையாத ஓர் எளிய அடியாருக்காக, சிவனே உமையவள் சகிதம் வந்து காட்சி தந்து, சாட்சி சொன்ன அதிசயம் நடந்த ஊர்தான் அவளிவ நல்லூர் (அவள் இவள் நல்லூர்).

சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை...பல்வேறு சிறப்புகளால் பெரும்பேர் பெற்றுத் திகழ்கிறது. இறைவனே வந்து சாட்சி சொன்ன ஊர் என்பதால் இதை `சாட்சிநாதபுரம்' என்றும், `பனையாத்தாள்’ என்ற சக்திமிகுந்த கிராம தேவதையின் கோயில் இருப்பதால், ‘பனை பழுத்த நல்லூர்’ என்றும்கூட வேறு இரு பெயர்கள் இவ்வூருக்கு இருக்கின்றன.

‘‘பாடல்பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலங்களில் நூறாவது தலம் இது. சுமார் 2000 வருஷங்களுக்கு முந்தைய கோயில். சைவக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் வந்து வணங்கி, பாடிச் சிறப்பித்த தலம். இந்தத் தலத்துக்கு இன்னொரு பெருமை, ‘பஞ்ச ஆரண்ய தலங்கள்’ ஐந்தில் இதுவும் ஒன்று.

அந்தக் காலத்தில் இந்த ஊரில் சிவத்தொண்டையே சுவாசமாக நினைத்து, சிவாலயத்தில் இறைத்தொண்டு செய்து வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு சிவாச்சார்யர். அவருக்குச் சுசீலை, விசாலாட்சி என்று இரு மகள்கள். சோழநாட்டின் சிறப்புமிகுந்த பழையாறை நகரில், சோழ மன்னரின் அவையில் புலவராக இருந்த காசிபரின் மகன் விஷ்ணு சருமருக்கு, மூத்த மகள் சுசீலையை மணம்செய்து வைத்தார் சிவனடியார். திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து, காசி யாத்திரைக்குப் புறப்பட்ட விஷ்ணு சருமர், சுசீலையை அவருடைய பிறந்தகத்தில் விட்டுச்சென்றார். வருடங்கள் கழிந்தன. திடுமென சுசீலையை அம்மை நோய் தாக்கியதில், கண்கள் பாதிக்கப்பட்டுப் பார்வையை இழந்தாள். அத்துடன், அம்மைத் தழும்புகளால் அவளின் முகமும் பொலிவிழந்தது.

யாத்திரை முடிந்து திரும்பிய விஷ்ணு சருமர் மனைவியை அழைத்துச்செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கே, சுசீலையின் கோலம் கண்டு அதிர்ச்சியுற்றார். ‘இது என் மனைவி சுசீலையே அல்ல!’ என்று அலறிய அவரிடம், நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னபோதும் நம்பவில்லை.

இடைப்பட்டக் காலத்தில், அர்ச்சகரின் இளைய மகள் விசாலாட்சி பருவமடைந்து, நன்கு வளர்ந்து, அக்காவைப் போலவே அழகாக இருந்தாள். அவளைப் பார்த்த விஷ்ணு சருமர், ‘இவள்தான் என் மனைவி சுசீலை!’ என்று சொல்லி, அவளையே அழைத்துச் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். நடந்ததையெல்லாம் பார்த்து மனம்பேதலித்த சிவனடியார், கோயிலுக்குச் சென்று இறைவனடியில் வீழ்ந்து கதறினார். ‘நினைவுதெரிந்த நாளிலிருந்து உன்னைத்தானே பூஜித்தேன்... உனக்குத்தானே ஊழியம் செய்தேன்... அதற்குப் பலன் இதுதானா இறைவா? என் மகளுக்கு இந்தக் கதியா? இதைப் பார்ப்பதைவிட, உன் கழல்களிலேயே நான் உயிரைவிடுகிறேன்!’ என்று கண்ணீர் விட்டு அழுது, தொழுதார்.

அப்போது சிவபெருமான் ஒரு முனிவர் உருவத்தில் தோன்றி, ‘நாளை காலை அனைவரும் சந்திர தீர்த்தத்தில் நீராடி வாருங்கள்’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் அனைவரும் கோயிலுக்கு எதிரே உள்ள சந்திர தீர்த்தம் எனும் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டனர். என்ன அதிசயம்... தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த சுசீலையின் முகம், பழைய அழகோடு பளிச்சிட, கண் பார்வையும் திரும்பியிருந்தது. அப்போது அங்கே முனிவர் உருவில் தோன்றிய இறைவன், ‘அவளே இவள்!’ என்று கூறியருளினார். ‘நீ மணமுடித்த அந்தப் பெண்தான் இவள்’ என்று இறைவனே சாட்சி சொன்னதும், விஷ்ணு சருமர் தன் தவற்றை உணர்ந்து வருந்தினார். தனது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்து, மகளின் வாழ்வை மீட்டுத்தந்த பரமனின் பெருங்கருணையை நினைத்து, சிவனடியார் கண்ணீர் வடிக்க... ரிஷப வாகனத்தில் அம்மையப்பனாகக் காட்சி தந்து, அவரை இன்னும் பேருவகைக்கு உள்ளாக்கினார் சிவபெருமான். தன் பக்தனின் குறை தீர்க்க நேரே வந்து சாட்சி சொன்னபடியால், ‘சாட்சிநாதர்’ என்ற பெயரால் வழங்கப்பட்டார். இந்த ஐதீகத்தை விளக்கும்விதமாக, ரிஷப வாகனத்தில் அம்மையும் அப்பனும் அருள்பாலிக்கும் திருமூர்த்திகள் மூலவர் சந்நிதியில் சிவலிங்க மூர்த்தத்தின் பின்புறம் காணப்படுவது, வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பு!’’ என்று பக்திபூர்வமாக விளக்கினார் மகாலிங்கம். அவரே தொடர்ந்து, ‘‘இந்தச் சம்பவம் நிகழ்ந்தது ஒரு தை அமாவாசை தினம் என்பதால், இப்போதும் தை அமாவாசை தினம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. காலையில் புனித நீராடல், பஞ்சமூர்த்திகள் திரு உலா, தீர்த்தம் வழங்குதல் என விமரிசையாக இருக்கும்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ சாட்சிநாதர் ! திருக்கோயில் -
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்,
அவளிவ நல்லூர்,திருவாரூர்
திருவாரூர் மாவட்டம்.திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம், ஆவூர் சென்றால் அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அவளிவநல்லூர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாபேட்டையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவு.