இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர், மாணிக்கவண்ணர்,கரிநாலேசுரர்.
இறைவி :ஸ்ரீ மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி அம்பாள்
தல மரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்,கரி தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி அம்பாள் சமேத ஸ்ரீ மாணிக்கவண்ணர் கோயில் திருக்கோவில், திருநாட்டியத்தான்குடி
தலவரலாறு
இத்தல இறைவன் சுயம்பு லிங்மாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 181 வது தேவாரத்தலம் ஆகும். கிழக்கு நோக்கிய கோயில், நகரத்தார் திருப்பணி பெற்றது.கிழக்குக் கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சன்னதி மேற்கு நோக்கியுள்ளது.ஐந்துநிலை ராஜகோபுரம். உட் பிராகாரத்தில் வழிகாட்டிய விநாயகர், முருகன், விசுவநாதர், கஜலட்சுமி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா ஆகியன. கோட்புலி நாயர் உருவம் உள்ளது. மகாமண்டபத்தில் நடராசசபையும் உற்சவமூர்த்தங்களும் உள்ளன. ரத்னேந்திர சோழ மன்னனும், அவனது தம்பியும் அவர்களது தந்தையார் விட்டுச்சென்ற ரத்தினங்களை மதிப்பிட்டு பிரித்து கொள்ள முயற்சித்தனர். ரத்தினத்தை மதிப்பிடுபவர்கள் பலர் வந்து ரத்தினங்களை மதிப்பிட்டும் இவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை.குழப்பம் நீடித்தது. கடைசியில் இருவரும் இத்தலத்து இறைவனிடம் வேண்டினர்.இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்து கொடுத்ததுடன் நாட்டையும் பிரித்து கொடுத்துவிட்டு மறைந்தருளினார் என்பது வரலாறு. இதன் காரணமாகவே இத்தல இறைவன் ரத்னபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்
தலபெருமை:
63 நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம் என்ற பெருமையை உடையது இத்தலம். இவர் சோழர் படைத்தலைவராக பணியாற்றி வந்தார். பகைவர் யாராயினும் அவர்களை கொலை செய்வதில், புலி போன்ற குணம் உடையவராதலால், இவருக்கு கோட்புலி என்ற பெயர் ஏற்பட்டது.இவர் தனக்கு கிடைத்த செல்வத்தையெல்லாம் நெல் மூட்டைகளாக வாங்கி வீட்டில் அடுக்கி வைத்தார்.அவைகளை கொண்டு கோயில் திருப்பணிகளுக்கு செலவு செய்தார். ஒரு முறை நாயனார் அரச கட்டளையை ஏற்று போர் முனைக்கு புறப்பட்டார். அவர் போகும் போது, தன் வீட்டாரிடமும், உறவினரிடமும், இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் இறைப்பணிக்கு உரியவை.அதை யாரும் சொந்த உபயோகத்திற்கு எடுக்க கூடாது.ஆனால் கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம், என திட்டவட்டமாக கூறிச்சென்றார். கோட்புலியார் போருக்கு சென்ற சில நாட்களில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர்.இதனால் கோட்புலி நாயனார் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்து தாராளமாக செலவு செய்தனர்.போருக்கு சென்ற நாயனார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். கோயில் திருப்பணிக்காக சேமித்து வைத்திருந்த நெல்லை சொந்த உபயோகத்திற்காக எடுத்து செலவு செய்ததை அறிந்து கடும் கோபம் கொண்டார். நெல்லை உபயோகப்படுத்திய அனைத்து உறவினர்களையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடாதபடி காவலாளிகளுக்கு உத்தரவு கொடுத்து விட்டு, தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள், மனைவி, சுற்றத்தார் என அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்.அவரது வாளுக்கு தப்பி பிழைத்தது ஒரு ஆண்பிள்ளை மட்டுமே. அப்பிள்ளையை கண்ட காவலன் நாயனாரிடம்,""ஐயா! மீதமிருப்பது இவன் மட்டும் தான்.இவனோ சாப்பாடு சாப்பிடவில்லை.எனவே இவனை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியுங்கள்,"என்று வேண்டினான். அதற்கு நாயனார்,""இப்பாலகன் சாப்பாடு சாப்பிடா விட்டாலும், இவனது தாய் இறைவனுக்காக சேமித்து வைத்திருந்த நெல் சாப்பாடை சாப்பிட்டிருப்பாள். அவளது தாய்ப்பாலை இவன் குடித்திருப்பான்,"என கூறியபடியே அக்குழந்தையையும் வாளால் வெட்டி இரு துண்டாக்கினார்.அப்போது இறைவன் பார்வதி சமேதராக ரிஷபத்தின் மீது காட்சி தந்து,"அன்பனே! உனது வாளால் இறந்தவர்கள் அனைவருக்கும் முக்தி கிடைத்தது.நீயும் என்னிடம் வந்து சேர்வாய்,"என அருள்புரிந்தார். ஒரு முறை சுந்தரர் இக்கோயிலுக்கு வந்த போது சிவனையும், அம்மையையும் காணாமல் திகைத்து விநாயகரை வணங்கினார்.விநாயகரோ, ஈசானத்திசையில் கையை காட்டி வாய்பேசாதிருந்தார்.சுந்தரர் அந்த திசையில் சென்று பார்த்த போது சிவனும் பார்வதியும் நடவு நட்டுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சுந்தரர், நட்ட நடாக்குறை நாளை நடலாம் நாளை நடாக்குறை சேறுதங் கிடவே நட்டது போதும் கரையேறி வாரும் நாட்டியத்தான்குடி நம்பி, என பாட அம்மையும் அப்பனும் மறைந்து கோயிலுக்குள் எழுந்தருளினர். சுந்தரர் அவர்களைப் பின் தொடர்ந்து கோவிலுக்குள் செல்லும் போது, ஒரு பாம்பு வாயிலில் தடுக்க அப்போது பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது. யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தமுண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தது.யானையால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் கரிதீர்த்தம் என்றும், கரிக்கு அருள்புரிந்த இறைவன் கரிநாலேசுரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு முறை கோட்புலி நாயனார் தனது பெண்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் இத்தலத்தில் வைத்து சுந்தர மூர்த்தி நாயனாருக்கு பணிப்பெண்களாக தந்தார்.சுந்தரரோ அவர்களை தன் புதல்விகளாக ஏற்றுக்கொண்டார்.மகரக்கண்டிகை என்ற ருத்ராட்சத்தை இங்குள்ள அனைத்து மூர்த்திகளும் அணிந்துள்ளனர். பிரார்த்தனை குடும்பத்தில் பிரச்சனை, பிரிக்க முடியாத சொத்துக்கள், பயிர் செழிப்பாக வளர இங்கு பிரார்த்தனை செய்தால் சிறந்த பலன் தரும் என்பது நம்பிக்கை.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில் திருநாட்டியாத்தான்குடி திருநாட்டியாத்தான்குடி அஞ்சல் வழி மாவூர் S.O. திருவாரூர் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 610202.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்:
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.