இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் ஸ்வாமி
இறைவி :ஶ்ரீ சாந்தநாயகி. அம்பாள்
தல மரம் :நெல்லி மரம்
தீர்த்தம் : அக்னி, கங்கா தீர்த்தம்
Arulmigu Paarvatheeswarr Swamy Temple, Inchikudi, Thiruvaarur | அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத அருள்மிகு பார்வதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்- இஞ்சிக்குடி, திருவாரூர் தல வரலாறு
மூலவர், தவக்கோலத்தில் பார்வதி பூஜித்த லிங்கம், எனவே பார்வதீஸ்வரர் எனப்படுகிறார். வலப்புறம் தனிச் சந்நதியில் அம்பிகை சாந்தநாயகி எழில் கொஞ்சும் தோற்றத்துடன் வீற்றிருக்கிறாள். கால்களில் கொலுசுடன், திருமியச்சூர் லலிதாம்பிகையை நினைவுறுத்துகிறாள். குலோத்துங்கச் சோழன் தேவியிடம், தனக்குக் குழந்தை வரம் வேண்டிப் பெற்றான். குழந்தை பிறந்தபின் அம்பிகைக்கு கொலுசு வாங்கிச் சாத்தி அழகு பார்த்தான். இன்றைக்கும் தவறாமல் கொலுசு அணிவிக்கப்படுகிறது. சந்நதியின் இருபுறங்களிலும் வாராஹியும், பாலமுருகனும் காட்சி அளிக்கின்றனர். எதிர்ப்புறம் சனீஸ்வரர், பாணலிங்கம், நாகர், துவாரபாலகர்கள் தவிர, சூரிய சந்திரரையும் அருகருகே காணலாம். வெளிப்பிராகாரத்தில் காட்சி தந்த நாயகர் (சிவபெருமான்), தட்சிணாமூர்த்தி, செல்வகணபதி, ஐயப்பன், மஹாலட்சுமி பின் கருவறைக்குப் பின் அர்த்தநாரீஸ்வரர். நேர்எதிரே முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்கள். 16 அடி உயரத்தில் சட்டை நாதர் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று வாராஹிக்கு சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது. யாகமும் நடத்துகிறார்கள். அதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என பக்தர்கள் நம்புகிறார்கள். அதேபோல் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. திருமண பாக்கியம் வேண்டும் மக்கள் இங்குள்ள சண்டிகேஸ்வரர் - சண்டிகேஸ்வரியின் திருமணக் கோலத்தை வணங்குகின்றனர்.
தலச்சிறப்பு :
பார்வதீஸ்வரர் திருக்கோவில் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக குழந்தைச் செல்வம் இல்லை. எனவே இத்தலத்தின் அம்மனை வேண்டினான். அம்மன் அருளால் குழந்தை வரம் கிடைக்கப் பெற்றான். உடனே அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினான் மன்னன். இன்றும் அம்மன் கால்களில் கொலுசுகளுடன் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் சூரியன், சந்திரன் அருகருகே காட்சி தருவது சிறப்பு ஆகும். எனவே இத்தலத்தில் வந்து வழிபட்டால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் திருமணக் கோலத்தில், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவது சிறப்பு ஆகும். எனவே இத்தலத்து இறைவனை வழிபட்டால், திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு ஆகும்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் திருக்கோயில் இஞ்சிக்குடி, திருவாரூர் திருவாரூர் மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
ஆலயம் அமைவிடம்:
மயிலாடுதுறையில் இருந்து கோவிலுக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது. எனவே பேரளம் வழியாக இஞ்சிக்குடி சென்று அங்கிருந்து கோவிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 19.1 கீ.மீ தொலைவில் இஞ்சிக்குடி உள்ளது