Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Meenakshi Sunthareswarar Shiva Temple Kuruvikulam,Thirunelveli

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - குருவிகுளம்


Meenakshi Sunthareswarar Shiva Temple Kuruvikulam,Thirunelveli !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்

இறைவி :ஸ்ரீ மீனாட்சி அம்மன்

தல மரம் : வன்னி மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThirunelveliDistrict_MeenakshiSunthareswararTemple_Kuruvikulam-shivanTemple


அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - குருவிகுளம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இதன் பழங்காலப் பெயர் ‘பட்சி தடாகம்’ என்பதாகும். ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள். இயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.

குருவிகுளம் திருக்கோவில் சிறப்புகள்

தமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் ஜமீன்தார்கள் இருந்தனர். இவர்களில் ராயல் ஜமீன் என்று அழைக்கப்பட்டது, குருவிகுளம் ஜமீன்தார்தான். இந்த ஜமீன் பகுதியை, பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சுமார் 400 வருடங் களுக்கு முன் குருவிக்குளத்தில் ஆலயங்கள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் இருந்த குருவிகுளம் ஜமீன்தார், வில்லு வண்டியில் கழுகுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம்.

கழுகுமலை முருகன் கோவில் எட்டயபுரம் ஜமீன் நிர்வாகத்துக்குள்ளே இருந்தது. எனவே அவருக்கு தான் அங்கு முதல் மரியாதை வழங்கப்படும். எனவே குருவிகுளம் ஜமீன்தார் அங்கு செல்லும் சமயங்களில் எல்லாம், எட்டையபுரம் ஜமீன்தாருக்காக காத்திருந்து தெய்வத்தை வழிபட வேண்டிய நிலை உருவானது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நீண்ட நேரம் எட்டயபுரம் ஜமீன் கோவிலுக்குள் இருந்த காரணத்தினால், குருவிகுளம் ஜமீன்தார் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டார்.

இதனால் மனம்நொந்து போன குருவிகுளம் ஜமீன்தார், தனது அரசவையை கூட்டி, குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி ஆலயம் நிர்மாணம் செய்தால், அதற்கு கருவறையில் வைக்க மூலவர் சிலை வேண்டும். எனவே காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார். ஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருந்தது. அன்று இரவு ஜமீன்தார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய்? மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினார்.

“அதை எப்படி கண்டுபிடிப்பது?” என்று ஜமீன்தார் வினா எழுப்பிய போது, “ஓரிடத்தில் கருடன் வட்ட மிடும். அவ்விடத்தில் தான் நான் இருப்பேன்” என்றும் கூறியிருந்தார். மறுநாள் விடிந்தது. ஜமீன்தார் தன்னுடைய படையுடன் கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார் ஜமீன்தார். சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.

கோவில் அமைப்பு :

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

இந்த தேரை குருவிகுளம் அரண்மனை மன்னர் பெண் வழி வம்சா வழி வாரிசுதாரர்கள், வடம் பிடித்து கொடுப்பர். 10 சமுதாய மண்டகப்படி கட்டளைதாரர்கள், சமூகத்தினர், இதில் பங்கு பெற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். நான்கு வீதிகளை கடந்து தேர் நிலைக்கு வரும்போது, அரண்மனை வாசலின் வடக்கு ரத வீதியில், தேர் நிற்கும். அப்போது அரண்மனை மன்னர் சமஸ்தானத்தைச் சார்ந்த, குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவார்கள். அந்த நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது, மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் அருள்தான். திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்..

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - குருவிகுளம்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
குருவிகுளம்
திருநேல்வேலி மாவட்டம்
PIN - 627414



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



அமைவிடம்:

இக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.