Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Mullaivananathar Temple - Thirukarukavur Village -Thanjavur

அருள்மிகு ஸ்ரீ கர்பரஷாம்பிகை அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ முல்லைவனநாதர் திருக்கோவில் திருக்கருகாவூர்


Arulmigu Mullaivananathar Temple - Thirukarukavur Village -Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ முல்லை வன நாதர்  

இறைவி :அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை

தல மரம் :வில்வம் மரம்

தீர்த்தம் : க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம்

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ முல்லை வன நாதர் திருக்கோயில் -திருக்கருகாவூர் தல வரலாறு.

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.

அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.

குழந்தைச் செல்வம் :.

உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன. மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.



அமைவிடம்:

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம்..