Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sooriya Kotiswarar Temple, Keezha Sooriya Moolai,Thanjavur

அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்பாள் உடனுரை சூரிய கோடீஸ்வரர் திருக்கோவில், கீழச் சூரிய மூலை,தஞ்சாவூர்


Arulmigu Sooriya Kotiswarar Temple, Keezha Sooriya Moolai,Thanjavur !!இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர்

இறைவி :ஸ்ரீ பவளக்கொடி அம்பாள்

தல மரம் : இலுப்பை மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThanjavurDistrict_SuriyakotiswararTemple-KeezhaSuriyaMoolai_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்பாள் உடனுரை சூரிய கோடீஸ்வரர் திருக்கோவில், கீழச் சூரிய மூலை,தஞ்சாவூர்

‘‘ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழைமையான தலம் இது. சூரியனுக்கு மூலாதாரச் சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார்கோயிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில்தான் முழுச்சக்தியையும் பெற்றான். நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால்தான், இந்த ஊருக்கு கீழச் சூரிய மூலை என்றே பெயர் வந்தது. இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் இறைவனை வழிபடுவதாக நம்பிக்கை. அதை உறுதிப்படுத்துவது போல, கர்ப்பகிரகத்தின் உள்ளும் வெளியே சந்நிதியிலும் எல்லா கோயில்களிலும் இருப்பதுபோல இருட்டாக இல்லாமல் வெளிச்சமாக இருக்கும். உள்ளே ஒரு கண்ணாடியைக் கொண்டுபோனால், அதன் பிரதிபலிப்பு சுவரில் தெரியும்’’

தல வரலாறு:

உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் சூரிய பகவான், மாலை நேரத்தில்வரும் பிரதோஷ வழிப்பாட்டைத் தரிசிக்க முடியவில்லையே ஏங்கி வருந்தினாராம். அனுதினமும் செய்ய வேண்டிய பணியை விட்டுவிட்டு அவரால் எப்படி வர முடியும்? அவர் தனது ஏக்கத்தையும் வருத்தத்தையும் தன் சீடரான யாக்ஞவல்கிய முனிவரிடம் தெரிவித்தார். சூரியனிடமிருந்து வேதங்களைக் கற்ற அந்த மாமுனிவர், தான் அனுதினமும் வழிபடும் இந்தத் தலத்தின் இறைவனான ஸ்ரீ சூரிய கோடீஸ்வர பகவானிடம் சூரியனின் ஏக்கத்தைக் கூறி, தன் குருவின் கவலையைப் போக்குமாறு பிரார்த்தித்தார். மேலும், சூரியனிடம் கற்ற வேதங்கள் அனைத்தையும் இறைவனுக்குத் தட்சணையாக்கி, வேதாக்னி யோகப் பாஸ்கர சக்கர வடிவமாகச் செய்து, அதன் பலன்களைப் பொறித்து, அதை சூரிய கோடிப் பிரகாசரின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வேண்டினார். அப்படி அவர் சமர்ப்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாகத் தோன்றி வளர்ந்தது. தொடர்ந்து அந்த இடமே இலுப்பைக் காடாக மாறியது (கோயிலின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம்). இலுப்பை மர விதைகளைச் சேகரித்து அவற்றிலிருந்து இலுப்பை எண்ணெய் எடுத்த முனிவர், மாலைவேளையில் கோடி தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபட ஆரம்பித்தார். பிரதோஷ காலத்தில், ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக்கொண்டிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியதேவன், கோடி தீபங்களைக் கண்டு வணங்கி, பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் அனைத்தையும் பெற்றதாக தலவரலாறு விவரிக்கிறது.

தல சிறப்பு

ஆம்! சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்துவிட்டு, பைரவ ரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கண்டத்தில் (கழுத்தில், குரல்வளை பகுதியில்) சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப் பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தையும் சூரிய சந்திரர்களின் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்வதாக நம்பிக்கை.வலக்காலை முன்வைத்த கோலத்தில் துர்கை!

துர்கை சந்நிதியில், துர்காம்பாள் நம்மை நோக்கி எழுந்து ஓடிவருவதுபோல, வலக்காலை ஓரடி முன்வைத்து நிற்கிறாள். அதோடு காலில் மெட்டியும் அணிந்துள்ளது காண, மிக இனிய காட்சி. ‘‘துர்கை ராகுவால் ஏற்படும் சோதனைகளி லிருந்து நம்மைக் காப்பவள். இங்கே ராகு காலத்தில் தீபம் ஏற்றி வணங்குவோருக்கு, ஓடி வந்து அருள்செய்கிறாள் துர்கை. அதனால்தான் காலை முன்வைத்த கோலத்தில் நிற்கிறாள். இங்கிருக்கும் நவகிரக சந்நிதியில் எல்லா கிரகங்களுமே வாகனங்களுடன் இருக்கும். அது மட்டுமல்ல; எல்லா கிரகங்களுமே சூரியனைப் பார்த்தபடி இருப்பதும் அதிகம் காணமுடியாத அமைப்பு’’

இந்த ஆலயத்துக்கு வரும் அன்பர்கள், சூரியனுக்கு ஹோமம் செய்து வழிபடுகின்றனர். மேலும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், மகாலட்சுமிக்கு ஹோமம், அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, சங்கல்பங்களை முன்வைத்து பிரார்த்தனை செய்வதால், கண் சம்பந்தமான பிரச்னைகள், பார்வை குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம். இங்கே அன்னதானம் செய்வதும் முன்னோர்களின் தோஷங்களும் சாபங்களும் விலகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரதோஷ காலத்தில் அகல் தீபம் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வணங்குவது, மிகவும் சிறந்த பிரார்த்தனை. சூரிய தோஷம் உள்ளவர்கள், மூலவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்பாள் உடனுரை சூரிய கோடீஸ்வரர் திருக்கோவில்,
கீழச் சூரிய மூலை,தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் ,திருக்கோயில் திறக்கும் நேரம்:

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் பகல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை.அமைவிடம்:

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோக்கி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகே இறங்கிக்கொள்ளலாம்.