Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Karkadeswara Swamy Temple, ThirunthudevanKudi,Thanjavur,Kumbakonam

அருள்மிகு அபூர்வநாயகி, அருமருந்துநாயகி சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில் - திருந்துதேவன்குடி,தஞ்சாவூர்


Arulmigu Viswanatha Swamy Temple, Theperuma nallur,Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கற்கடேஸ்வர சுவாமி

இறைவி :ஸ்ரீ அபூர்வநாயகி, அருமருந்துநாயகி அம்பாள்

தல மரம் :நங்கை மரம்

தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம், பங்கய தீர்த்தம், காவிரி தீர்த்தம்

ThanjavurDistrict_KarkadeswaraswamyTemple-Thirunthudevankudi_shivanTemple


அருள்மிகு அபூர்வநாயகி, அருமருந்துநாயகி சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில் - திருந்துதேவன்குடி,தஞ்சாவூர்

கடகராசி – பரிகார ஸ்தலம்.

கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். இக்கோயில் நண்டான்கோவில் என்றும், இவ்ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் கோவில் தூணில் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.

தலபுராணம்

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்துக்கு ஒரு கந்தர்வன் வந்தான். அவன் துர்வாசரை பார்த்து பரிகாசம் செய்தான். அதனால் துர்வாசர் முனிவர் கோபம் அடைந்தார். கந்தர்வனை பார்த்து சிவபூஜையை நகைத்தாய் அதனால் நீ நண்டாகக் கடவாய் என்று சாபம் இட்டார். கந்தர்வன் பயம் கொண்டு துருவாசரின் காலில் விழுந்து வணங்கி சாப விமோசனம் கேட்க, துருவாசர் அவனைப் பார்த்து நீ சிவபூஜையை இகழ்ந்ததால் நீயும் சிவபூஜை செய்தால்தான் இன்பாவம் தீரும். ஆகவே பூலோகத்தில் உள்ள திருந்துதேவன்குடி அகழியில் நண்டாகப் பிறக்க வேண்டும். அகழியில் பூக்கும் தாமரைப்பூவை பறித்து அத்தலத்து இறைவனை வழிபாடு செய். இப்படி ஒரு மண்டலம் செய்தால் உனக்கு விமோசனம் உண்டாகும் என்றார்.

அதன்படி நண்டு வடிவில் கந்தர்வன் தினமும் அருகிலுள்ள புஷ்கரணியில் மலர் பறித்து சுயம்பு லிங்க ஸ்வாமிக்கு பூஜை செய்து வந்தான். இதற்கு இடையில் தேவலோகத்து அரசனான இந்திரன் அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி தன் குருவான விழாயபகவான் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்து வந்தான். இங்கிருந்த புஷ்கரணியில் 1008 தாமரை மலர்கள் பறித்து வந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தான். ஒருநாள் நண்டு பூஜை செய்வதை பார்த்து விட்டான். தன் பூஜைக்கு இடையூறாக இருந்த நண்டை கொல்ல முயன்றான். அப்போது ஸ்வாமி தனது சிரசில் துளை ஏற்படுத்தி கொடுக்கவே கந்தர்வன் அதற்குள் புகுந்து பாவ விமோசனம் பெற்றான்.

இந்திரன் தன் தவறை உணர்ந்து விமோசனம் கேட்டான். மீண்டும் ஒரு மண்டலம் பூஜை செய்து விமோசனம் பெற்று இந்திரலோகத்தை அடைந்தான்.

நண்டு பூஜித்து சிவப்பேறு அடைந்ததால் இத்திருக்கோயில் கற்கடேஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

சோழ மகாராஜன் வழிபட்டது. மிக பழங்காலத்தில் உறையூரில் வாழ்ந்த சோழ மகாராஜன் ஒருவன் பக்கவாத நோயால் வருந்தினான். கை, கால்களை அசைக்க முடியாமல் படுக்கையில் கிடந்தான். அரண்மனை மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் குணமாகவில்லை. சோழ மகாராஜன் மிகவும் கவலையோடு படுக்கையில் இருந்தபடி சிவபெருமானை தியானம் செய்தான்.

ஒருநாள் தேவதேவேசனார் மருத்துவராகவும், பார்வதிதேவி மருத்துவரின் மனைவியாகவும் கோலம் கொண்டு சோழனது அரண்மனைக்கு வந்தார்கள். அவர்கள் சோழ மகாராஜனை கண்டு ஆறுதல் கூறினார்கள். மருத்துவர் தமது விபூதி பையை அவிழ்த்து விபூதியை எடுத்து சோழனது நெற்றியில் பூசினார். சிறிதளவு விபூதியை தண்ணீரில் போட்டுக் குடிக்க செய்தார். பிறகு ஒரு ருத்ராக்ஷத்தை பட்டுக்கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டி விட்டார்.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே. மகாராஜனே விபூதியும் ருத்ராட்சமும் சிவனது வேடங்கள். இவைகள் நோய்க்கு மருந்தாகும் மந்திரங்களும் இவைகளே. நான் நாளைக்கு வருகிறேன் முறைப்படி மருத்துவம் தொடங்குகிறேன் என்று சொல்லிவிட்டு தானும் மனைவியும் அரண்மனையை விட்டு வெளியே போய்விட்டனர். அன்றிரவு மகாராஜன் நிம்மதியாக தூங்கினான். மறுநாள் பொழுது விடிந்ததும் மகாராஜன் கண் விழித்துத் தானாகவே எழுந்து படுக்கையில் உட்கார்ந்தார். பக்கவாத நோய் இரவே குணமாகிவிட்டதால் மகாராஜன் தானே நடக்கத் தொடங்கினான்.

இதைக்கண்ட அரண்மனைவாசிகள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். நேற்று வந்துபோன மருத்துவரும் அவரது மனைவியும் மறுநாளும் வந்தார்கள். அரசனை கண்டு மருத்துவர் மருத்துவம் தொடங்கலாமா என்று சிரித்தபடி கேட்டார். அரசன் பரவசம் அடைந்து மருத்துவரை வணங்கி வரவேற்றான். மருத்துவரே நீங்கள் பூசிவிட்ட திருநீறும், கட்டிவிட்ட ருத்ராக்ஷமும் நோயை தீர்த்து விட்டன. இவைகளே மருந்தாகி விட்டன. இதற்கு மேல் மருத்துவம் வேண்டுமா என்று மருத்துவரை பாராட்டினான். மருத்துவரே உங்களுக்கு சன்மானம் அளிக்க விரும்புகிறேன். தாங்கள் எதைக் கேட்டாலும் தரச் சித்தமாக இருக்கிறேன் என்றான். மருத்துவர் சோழ மஹாராஜனை பார்த்து மஹாராஜனே, காவேரியின் வடகரையில் எங்கள் ஊர் இருக்கிறது. பெரிய வெள்ளம் வந்து எங்கள் ஊரில் இருந்த சிவாலயம் மண் மேடிட்டு மூடி கிடக்கிறது. மண் மேட்டை அகற்றி சிவாலயத் திருப்பணி செய்ய வேண்டும். அதுதான் நீ தரவேண்டிய சன்மானம் என்றார். மஹாராஜனும் இசைந்தான்.

மருத்துவர் வழிகாட்ட மகாராஜன் பரிவாரங்களோடு வந்து மண்மேடிட்ட இடத்தை அடைந்தான். மருத்துவர் மண்மேட்டை சுட்டி காட்டினார். மண்மேட்டை அகற்றி மறைந்த கோயிலை வெளிப்படுத்தி திருப்பணி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு மருத்துவர் மறைந்தார். மருத்துவர் மறைந்தவுடன் சோழ மகாராஜன் திகைப்படைந்தான். மருத்துவராக வந்து நோய் தீர்த்தவர் இத்தலத்து இறைவன் என்று அறிந்து கொண்டான் மகாராஜன். ஆயிரக்கணக்கான ஆட்களைவிட்டு மண்மேட்டை அகற்றும்போது வெள்ளத்தால் இடிந்த கோயிலில் இருந்த சுயம்பு சிவலிங்கத்தை கண்டான். அம்மன் சிலை கிடைக்காதலால் புதிதாக ஒரு அம்மன் சிலையை செய்தார். தனது பக்கவாத நோயை குணப்படுத்த இறைவன் மருத்துவராகவும், இறைவி மருத்துவச்சியாகவும் வந்ததால் புதிதாக செய்த சிலைக்கு அருமருந்தம்மை என்றும், ஸ்வாமிக்கு அருமருந்துடையர் என்றும் பெயர் சூட்டினான். குடமுழுக்கும் செய்வித்து உறையூருக்கு திரும்பினான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு கோவிலை சுற்றி உள்ள நிலத்தில் உழுத போது மண்ணில் புதைந்து உள்ள அம்மன் சிலை கிடைத்தது. இத்தகவலை மஹாராஜனிடம் தெரிவித்தனர். சோழ மகாராஜன் அங்கே வந்து புதிதாக அம்மன் கோயில் கட்டி அபூர்வமாக கிடைத்ததால் “அபூர்வநாயகி” என்று பெயர் சூட்டினான்.

கோயிலை சுற்றியுள்ள அகழியில் நவபாஷாண கிணறுகள் இருந்ததாகவும், அகழி நீரில் நீராடி அருமருந்துநாயகி அருமருந்தீசருக்கு நல்லென்ணை அபிஷேகம் செய்து அந்த எண்ணையை உட்கொண்டால் சகல வியாதிகளும் நிவர்த்தியாகும் என்று புராணம் கூறுகின்றது. எல்லா கோயில்களிலும் சந்திரன் நின்ற நிலையில் இருப்பவர் இத்திருக்கோயிலில் அமர்ந்த நிலையில் அதுவும் யோகநிலையில் இருக்கிறார். கோவில் வெளிப்புற சுவற்றில் மருத்துவர் மருந்து தயாரிப்பது போன்ற புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. இக்கோயில் பற்றிய பதிகத்தில் கொல்லிப் பண்ணில் அமைந்த 11 பாடல்கள் உள்ளன. இத்தலம் சுற்றிலும் வீடுகள் ஒன்றுமின்றி வயல் மத்தியில் தனிக் கோயிலாக உள்ளது என்னும் குறிப்பு ஒன்று உள்ளது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி – 612 105. வேப்பத்தூர், போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.,
போன்:+91- 435 – 2000 240, 99940 15871



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இக்கோவிலில் தினமும் காலை 9 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது