Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sapthappuriswara / Thiruthalamudaiyaar Temple - Thirukolaka

அருள்மிகு ஓசை கொடுத்த நாயகி அம்மன் சமேத சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார் திருக்கோவில், திருக்கோலக்கா


Arulmigu Sapthappuriswara / Thiruthalamudaiyaar Temple - Thirukolaka !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார்

இறைவி :ஸ்ரீ ஓசை கொடுத்த நாயகி அம்மன்,

தல மரம் :கொன்றை

தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம்

NagapatinamDistrict_SapthapureeswararTemple_Thirukolaka_shivanTemple


ருள்மிகு ஓசை கொடுத்த நாயகி அம்மன் சமேத சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார் திருக்கோவில், திருக்கோலக்கா

சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார் திருக்கோவில், திருக்கோலக்கா

சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார்.

பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார்.

அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.

அருள்மிகு திருத்தாளமுடையார் திருக்கோயில்,. திருக்கோலக்கா

கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.

இரண்டு அம்மன்கள் திருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள். முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர்.

திருக்கோயில் முகவரி :

ஓசை கொடுத்த நாயகி அம்மன் சமேத சப்தபுரீசுவரர் / திருத்தாளமுடையார் திருக்கோவில்,
திருக்கோலக்கா,
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

தினமும் காலை 7 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை



அமைவிடம்:

சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.