Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Kutram Porutha Nathar Temple - Thirukarupariyalur - Talainayiru

அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுரை கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி


Arulmigu Kutram Porutha Nathar Temple - Thirukarupariyalur - Talainayiru !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரர்

இறைவி :ஸ்ரீ கோகிலாம்பாள் அம்மன்,

தல மரம் :கருஊமத்தை,வன்னி, கொன்றை

தீர்த்தம் : சப்தசாகரம் தீர்த்தம்

NagapatinamDistrict_KalyaanaSuntharar_ThiruManancherry_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுரை கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி

கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி

அருள்மிகு கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி - தல வரலாறு

ஒருமுறை கைலாயத்தில் பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக பிறக்குமாறு சபித்தார். சாபவிமோசனமாக ஆடுதுறையில் உன்னை இடது பாகத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும் அருளினார். பிறகு, “திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி உன்னை மகளாக அடைய தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் செய்யும் யாகத்தில் பெண் குழந்தையாக நீ அவதரிப்பாய். பருவ வயதை அடைந்ததும் நான் அங்கு வந்து உன்னை மணப்பேன்” என்றும் அருளினார் சிவபெருமான். அதன்படி, அம்பாளும் பசு உருவத்தை எடுத்ததாகவும், திருமால் பசு மேய்ப்பவராகி சகோதரியான அம்பாளை பராமரித்ததாகவும் இக்கோவில் தலபுராணம் கூறுகிறது

தொடர்ந்து, அம்பாள் குத்தாலத்தில் பரத மகரிஷி செய்த யாக குண்டத்தில் மகளாகத் தோன்றியருளினார். தேவி வளர்ந்து சிவபெருமானை மணம் செய்வதற்காக தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், அவர் முன்தோன்றி, தேவியின் திருக்கரத்தைப் பற்றினார். அப்போது, உமாதேவி, “சுவாமி… நான் உங்களுக்குத் தான் சொந்தம். என்றாலும், ஒரு வேண்டுகோள். என் தாய் தந்தையர் அறிய என்னை மணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள். இறைவனும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார். உமையாளின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்மையாரின் விதிமுறைப்படி அவரது இல்லத்திலேயே மணம் செய்து கொண்டார். அதனால் அவர் `சொன்னவாறறிவார்’ என்றும் திருநாமத்தைப் பெற்றார் என்கிறது இக்கோவில் தலவரலாறு. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது

தலபெருமை

திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு கட்ட கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்

கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது..

காமன் சாபம் நீங்கப் பெற்ற தலம்

சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.

தனிச்சிறப்பு.

சிவம் என்றாலே மங்கலம். மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி. மணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது. அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. .

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுரை கல்யாண சுந்தரர் திருக்கோவில் - திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் காலை 6.00- மதியம் 1.00 மணி, மாலை 3.30 - இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



அமைவிடம்:

திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாகநாதர் திருக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற 276 திருத்தலங்களில் 25 வது திருத்தலம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைசெல்லும் வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து 2 கி மி தூரத்தில் உள்ளது திருமணஞ்சேரி