அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் கோயில் மாமல்லபுரம்

ருள்மிகு ஸ்தல சயன பெருமாள் கோயில் மாமல்லபுரம்
Arulmigu Thalasayana Perumaal Swamy Temple , Mamallapuram , Kancheepuram!!

இறைவர் : ஸ்தலசயனப்பெருமாள். 

இறைவி : நிலமங்கைத் தாயார்

தல மரம் : புன்னை மரம்

தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணிருள்மிகு ஸ்தல சயன பெருமாள் கோயில் மாமல்லபுரம்

108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில் அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால், கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரை கோயிலில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாகக் காட்சியளிக்கிறார்கள். கடற்கரை கோயில் சிதிலமடைந்த நிலையில், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குச மன்னன், ஊரின் மத்தியில் கோயிலை எழுப்பி வழிபாடு நடத்தத் தொடங்கினார்.
சிறப்புக்கள்

திருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின்மீது வைத்தபடி ஆதிசேஷன்மீது கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை `தல சயனம்’ என்பார்கள். இங்கு, மூலவரே `ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளித்ததைப்போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தை அமாவாசை, திங்கள் கிழமை, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளில் மஹோதன்ய தீர்த்தவாரி நடைபெறும். பல வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த மூன்றும் ஒருசேர அமையும் என்பது சிறப்பு. மஹோதன்ய தீர்த்தவாரியில் ஸ்தல சயன பெருமாள் கடலில் இறங்கி நீராடுவதைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். ஸ்தல சயன பெருமாள் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிவராக பெருமாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்று கடலில் இறங்கி நீராடினார்கள். சுவாமி நீராடியபிறகு பக்தர்கள் கடலில் இறங்கி நீராடி வழிபட்டனர். முன்னோருக்குத் திதி கொடுக்காதவர்கள் இன்று திதி கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

:திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

தல வரலாறு:

இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக இதை செய்தார். ""பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,''என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார்.முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், ""கடல்நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்,''என்றார். ""முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள், இந்தக்கடல் வற்றியே தீரும்,''என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,"" இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்''என்று கூறி சென்றார். மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே "ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்' காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, ""பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்''என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் "தலசயனப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

அமைவிடம்:

சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் இந்த அலயம் அமைந்துள்ளது.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees