திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்

ருள்மிகு வில்வவனேசுவரர் கோயில் திருவைகாவூர்
Arulmigu Vilvaneswarar Temple Thiruvaikavur !!

இறைவர் : அருள்மிகு வில்வவனேசுவரர்  

இறைவி : வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி

தல மரம் : வில்வமரம்

தீர்த்தம் : எமதீர்த்தம்அருள்மிகு வில்வவனேசுவரர் கோயில் திருவைகாவூர்

திருவைகாவூர், பச்சை வயல் நிறைந்த அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரத்தை பார்க்கும்போதேஉணரலாம். ராஜகோபுரத்திலிருந்து உள்கோபுரம் போகும் வழி நீண்டு நெடியதாக இருக்கிறது. ஈசனை நோக்காது, வாயிலை நோக்கிய, எமனைத் தடுத்து நிறுத்திய கோலத்தில் நந்திதேவரை தரிசிக்கலாம். கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கோயிலின் முகப்பு எளிய, சிறு மண்டபமாக அமைந்துள்ளது. தென்புறத்து வாயிலில் கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சந்நதி அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்பது போன்று நந்தி தேவர் கிழக்கு நோக்கியுள்ளார்.
தல வரலாறு:

வேடனொருவன் மரத்தினின்று சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அப்படி அந்த புராணக் கதை நிகழ்ந்த தலமே திருவை காவூர்தான் என்றறியும் போது, ஆச்சரியம் விழி விரிய வைக்கிறது. வேடன் ஒருவன் மானை பார்த்தான். அவன் அருகில் நகர்ந்து வருவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த வில்வாரண்யத்திற்குள் புகுந்தது. சற்று தூரத்திலிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் துரத்தியபடி உள்ளே நுழைந்தான். தவநிதி முனிவர், ‘‘மானைக் கொல்லாதே. வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘எனக்கு இந்த மான்தான் வேண்டும்’’ என்று பிடிவாதமாக நின்றான். பிறகு, முனிவரைப் பார்த்து பேசினான்: ‘‘இதோ பாருங்கள், என் வேலை வேட்டையாடுவது. எனக்கு உங்கள் பேச்செல்லாம் புரியவில்லை. ஒழுங்காக மானை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டுக் கூட மானை பிடித்துச் செல்வேன்.’’ தவநிதி முனிவர் மெல்ல சிரித்துக் கொண்டார். ஈசன் ஏதோ ஒரு திருவிளையாடலை அன்றைய தினம் நிகழ்த்தப்போகிறான் என்று தவத்தால் கனிந்திருந்த அவர் மனசுக்குத் தெரிந்தது. ஆகவே வேடன் மிரட்டலுக்குத் தான் பயப்படாததுபோல அமைதி காத்தார்.

அதாவது ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், உன்னிடம் அந்த மானை ஒப்படைக்கமாட்டேன்’ என்றது அந்த மௌனம். அது வேடனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டியது. அவ ரைத் தாக்க கை ஓங்கினான். அப்போது அருகில் ஓர் உறுமல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய வேடன் தன்னருகே ஒரு புலி நின்றிருந்ததைக் கண் டான். அதன் செந்தணல் விழிகள் கோபத்தை உமிழ்வதைக் கண்டான். அவ்வளவுதான் அங்கிருந்து மருண்டு ஓடினான். புலியும் அவனைத் துரத்தியது. ‘நன்றி மகாதேவா, இந்த அப்பாவி வேடனுக்கு நற்கதி அருளுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார் முனிவர்.

ஓடிய வேடன் சற்றுத் தொலைவிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். தன் விழிகளில் செம்மை நீக்கி கருணை ஒளிர, இவன் தானறியாமல் செய்யப்போகும் நல்வினைக்கு இவனுக்கு நற்கதி அருள தீர்மானித்தது புலியாய் வந்த சிவம். இரவு வந்தது. பசியும் பயமும் வேடனைப் பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் வில்வத் தளிர்களை உருவி புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக அதனை ஏற்றுக்கொண்டது. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து போட்டபடியே இருந்தான் வேடன். பொழுது விடிந்தது, மரத்துக்குக் கீழே தான் போட்ட வில்வ இலைகள் ஒரு பெரும் குவியலாக இருக்கக் கண்டான். புலியைக் காணோம். பயம் நீங்கியவனாக மரத்திலிருந்து இறங்கிய அவன் அந்த வில்வக் குவியலைத் தன் கைகளால் விலக்கிப் பார்க்க உள்ளே சிவ லிங்கம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. பளிச்சென்று தோன்றிய பேரொளியில் ஈசன் அவனுக்கு தரிசனமளித்து, ஆட்கொண்டார்.

பிரம்மனும் விஷ்ணுவும் அந்த அதிசயத்தைக் காண அத்தலத்தில் தோன்றினர். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் வேடனை நெருங்கினார். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். சற்று தொலைவே இருந்த நந்திதேவரை ஈசன் பார்க்க, நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனை சற்று தூரத்தில் நிறுத்தினார். எமன் அங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி, ஈசனைத் தொழ, அவரும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.

திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.திருவிழாக்கள்

இத்தலத்தில் பெருவிழா என்பது மாசி மாதத்தில் மகாசிவராத்திரி விழாதான்.கோவில் அமைப்பு :

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது. மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகா மண்டபத்தின் அருகேயே கையில் கோலோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். தட்சிணாமூர்த்தி நின்றகோலத்தில் மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக துவாரபாலகர்களாக பிரம்மனும் விஷ்ணுவும் நிற்கிறார்கள்! அடுத்து அர்த்த மண்டபத்திற்குள் உள்ள நந்திதேவரும் வாசலையே நோக்குகிறார். அவருக்குப் பின்னால் வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் பொங்கித் ததும்புவதை அனுபவித்துதான் உணர முடியும்.

கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் அத்தனை நேர்த்தி! அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் பிரமிப்பூட்டுகிறார்கள். அவர்களிலும் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்தின் பொக்கிஷமுமாகும். இவரை அருணகிரி நாதர் பாடி மகிழ்ந்திருக்கிறார். கோயிலை வலம் வந்து துர்க்கையை வணங்கி, அருகேயுள்ள அம்பாள் சந்நதிக்குப் போகலாம். சர்வஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம். அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். அடுத்து நடராஜரை தனி சந்நதியில் தரிசிக்கிறோம். இக்கோயிலில் கொலுவிருக்கும் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் திகழ்கிறார்கள். மூலவர் வில்வவனேஸ்வரரை தரிசித்துவிட்டு தல விருட்சங்களான வில்வ மரங்களையும் தரிசிக்கலாம்.அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் திருவைகாவூர் உள்ளது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு. தஞ்சாவூர் கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் அண்டக்குடி கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவைகாவூர் உள்ளது.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees