அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்

ருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்
Arulmigu Sounthreswarar Temple - Thirunariur !!

இறைவர் : ஸ்ரீ சௌந்தரநாதர் 

இறைவி : ஸ்ரீ திரிபுரசுந்தரி

தல மரம் : புன்னை மரம்

தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்ருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்

இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் பாடிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. உரையினில் வந்த பாவம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில், நாரையூர் நம்பனைத் தொழுவதால் நாம் பெறவிருக்கும் நன்மைகளை பட்டியலிடும் சம்பந்தர், இங்கே விளக்கம் அளிக்கப்படும் பல பாடல்களில் நலந்தாங்கு நாரையூர் என்று குறிப்பிடுகின்றார். நாரையூர் நம்பனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள், பதிகத்தின் பல பாடல்களில் உணர்த்தப் படுவதை நாம் காண்கின்றோம். நன்மைகள் தரும் நாரையூர் என்று ஞானசம்பந்தர் பாடியதற்கு ஏற்ப, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் கழித்த பின்னர் இந்த தலத்தில் அவதாரம் செய்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் தேவார திருப்பதிகங்கள் நாம் பெறுவதற்கு காரணமாகத் திகழ்கின்றார். நாரையூர் நகரம் செல்லாதவர்களும், வாழ்வினில் வளம் பெற்று வாழும் வண்ணம் தேவாரப் பதிகங்கள் ஓதி பயனடைவதை நாம் காண்கின்றோம்.
தல வரலாறு:

தவசிரேஷ்டரான துர்வாச முனிவர் ஒரு சமயம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அச்சமயம், ஆகாய மார்க்கமாக கந்தர்வர்கள் சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கொட்டைகளைக் கீழே போட, அவை மகரிஷி துர்வாச முனிவரின் மேல் விழுந்து முனிவரின் தவம் கலைந்தது. கண் திறந்த முனிவர் மிகுந்த சினம் கொண்டு அந்த கந்தர்வனைச் சபித்தார். பழக் கொட்டையைப் பறவைபோல் உதிர்த்த நீ நாரையாய்ப் போகக் கடவது! எனச் சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனடியாகப் பலித்துவிட்டது. கந்தர்வன் நாரையாக உருமாறினான். நாரை தன் பாவத்துக்கு விமோசனம் வேண்ட, முனிவரே வழி சொன்னார்: இங்கே இருக்கும் பெருமானுக்குத் தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என வழிகூறி அருளினார்.

நாரையும் அப்படியே செய்து இறைவனைப் பூசித்து வந்தது. ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும்போது பெரும் மழை பெய்து, கடும் புயலும் வீசியது. அதனால், நாரை பறக்க முடியாமல் தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாகக் காற்றில் பிய்ந்து விழுந்தன.

அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும் திருநாரையூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. சிறகுகளே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிப்பட்டு மோட்சம் பெற்றது. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த இத்தலத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.

திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு :

வலப்பால் அம்பாள் சந்நிதி. உள்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. உள் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் அழகுறக் காட்சி தருகிறார். நேரே மூலவர் சந்நிதி தெரிகிறது. உட்பிராகாரத்தில் வலமாக வரும்போது சந்தானாசாரியர் சந்நிதி உள்ளது. அடுத்திருப்பது நால்வருடன் சேக்கிழாரும், அகத்தியரும், பகமுனிவரும் ஒரு சேரசிலாரூபத்தில் எழுந்தருளியுள்ள சந்நிதி. அடுத்த தரிசனம் இத்தலத்திற்குச் சிறப்பாகவுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியாகும். இதைச் சுயம்பிரகாசர் சந்நிதி என்றும் அழைக்கின்றனர். (பொள்ளல் - உளி கொண்டு செதுக்குதல். இவ்வாறு செதுக்கப்படாமல் தானே தோன்றியவர். பொள்ளலில்லாப் பிள்ளையார் பொல்லாப்பிள்ளையார் என்றாகி விட்டது.) சந்நிதிக்கு முன் மங்களூர் ஓடுவேயப் பெற்ற மண்டபம் உள்ளது. வலம்புரி விநாயகராகப் பிள்ளையார் தரிசனம் தருகின்றார். சந்நிதியில் உட்புறத்தில் திருமுறை கண்ட வரலாறு வண்ணப் படங்களாக வைக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோரின் சிலாரூபங்கள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, திருமூலநாதர் சந்நிதிகளும், தலமரமும் யாகசாலையும் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் நவக்கிரகங்களை சனிபகவான், பைரவர், சூரியன் திருவுருவங்கள் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.அமைவிடம்:

சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் பாதையில் (இடப்புறமாக) சென்றால் தலத்தையடையலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. சாலையில் சிமெண்ட் பெயர்ப்பலகையும் உள்ளது. சற்று குறுகலான பாதை. கோயில்வரை செல்லலாம்.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees